* வீட்டில் இருப்பவர்கள் அனைவருடைய எதிர்பார்ப்பையும் நிவர்த்தி செய்யும் வகையில் வீட்டின் கட்டமைப்பு அமைய வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
* மொத்தம் எத்தனை அறைகள் தேவைப்படும்? யார் யாருக்கு என்ன வசதி வேண்டும்? எந்த இடத்தில் எந்த அறை அமைய வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
* நமது விருப்பத்திற்கு ஏற்ப அறைகளை அமைக்க ஆசைப்படுவது முக்கியமல்ல. அவை அனைத்தையும் வரைபடத்தில் கொண்டுவந்து விட வேண்டும். அதில் எப்படி குறிப்பிட்டிருக்கிறோமோ அதன்படிதான் கட்டுமானத்தை தொடங்க முடியும்.
* கட்டிட வரைபட அனுமதி பெறப்பட்டது மாதிரியே தான் கட்டிட வடிவமைப்பு அமைய வேண்டும் என்பதால் எந்தெந்த அறைகளை எந்த பகுதியில் அமைக்க போகிறோம், அதன் அளவுகள் என்ன? என்பதை வீட்டில் உள்ளவர்களிடம் கலந்து பேசி முடிவுக்கு வர வேண்டும்.
* கட்டிட வரைபடம் வரைந்து அனுமதி பெற்ற பிறகு அறை சிறியதாக இருக்கிறது? என்று குறைபட்டுக்கொள்வதில் அர்த்தமில்லை. அதன்பிறகு அறையை பெரியதாக மாற்ற நினைப்பது தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும். மீண்டும் கட்டிட வரைபடத்தில் திருத்தம் செய்து கட்டிட அனுமதி பெற வேண்டியிருக்கும். அஸ்திவாரத்தை எழுப்பிய பிறகு மாற்றம் செய்ய நினைத்தால் கட்டுமான செலவுகள் எகிறிவிடும்.
* எனவே கட்டிட அனுமதி வாங்கி கட்டுமான பணியை தொடங்கிய பிறகு மாற்றங்கள் செய்ய நினைக்கக்கூடாது.
* சில சமயங்களில் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி கட்டிட வடிவமைப்பு அமையாமல் போகலாம். அதில் சிறு மாற்றம் செய்தே ஆகவேண்டிய சூழல் ஏற்படலாம். அப்படிப்பட்ட சூழலில் நாம் விரும்பும் மாற்றங்களை விதிமுறைக்குட்பட்டு நடைமுறைப்படுத்த சாத்தியம் இருக்கிறதா? என்பதை கட்டிட வரைபடம் தயாரிக்கும் என்ஜினீயரிடம் கேட்டு அதற்கேற்ப வரைபடத்தில் மாறுதலை செய்ய வேண்டும்.
* அதே வேளையில் கட்டிட அனுமதி கிடைத்த பிறகு வரைபடத்தில் மாற்றம் செய்ய நினைத்தால் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியது இருக்கும். அவ்வாறு விண்ணப்பித்தாலும் சில நேரங்களில் திருத்தம் செய்யப்பட்ட வரைபடத்துக்கு கட்டிட அனுமதி கிடைக்க காலதாமதம் ஏற்படலாம். அது கட்டுமான பணியை தொடங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தும்.
* வீட்டின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை இறுதி செய்வது நாமாகத்தான் இருக்க வேண்டும். கட்டிட வரைபட என்ஜினீயர்களிடம் ஆலோசனை கேட்கலாம். அதையே இறுதி முடிவாக எடுத்துவிடக் கூடாது. கட்டிட அனுமதி கிடைக்கும் வகையில் விதிமுறைகளுக்கு உள்பட்டு என்ஜினீயர்கள் கட்டிட வரைபடத்தை தயாரிப்பார்கள். அது நமக்கு திருப்தி ஏற்படுத்தாமல் போகலாம். நமது விருப்பங்களை தெரிவித்து அதன்படி விதிமுறைக்கு தக்கபடி மாறுதல் செய்ய முடியுமா? என்று கேட்டு அதன்படி செயல்பட வேண்டும்.
* ஏனென்றால், சிலர் கட்டிட அனுமதி விரைவாக கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் வீட்டின் மொத்த அளவு, அதில் எத்தனை அறைகள் அமைக்க வேண்டும் என்பதை மட்டும் கட்டிட வரைபட என்ஜினீயரிடம் தெரிவிக்கிறார்கள். அவர்களும் இடத்தின் அளவுக்கு ஏற்ப விதிமுறைப்படி கட்டிட வரைபடத்தை தயாரித்து கொடுத்துவிடுவார்கள். கட்டுமான அனுமதி பெற்ற பிறகு வீட்டு உரிமையாலர்களுக்கு அது திருப்தி அளிக்காத பட்சத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் ஏற்படக்கூடும்.
* எனவே முதலிலேயே சரியான திட்டமிடலுடன் கட்டிட வரைபடம் தயாரித்து கட்டிட அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் எதிர்கால தேவைகளை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப திட்டமிட்டு செயல்பட வேண்டும்.