தனிப்பட்ட வழக்கு என்றால் என்ன என்பது குறித்து பலருக்குத் தெரியாது. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 200ன் படி, தனிப்பட்ட முறையில் ஒருவர் நீதிபதி முன்பு புகார் கொடுக்கலாம். உதாரணத்திற்கு, காவல் நிலையம் செல்கிறீர்கள். அங்கே உங்களை ஒரு காவல் ஆய்வாளர் அடித்து விடுகிறார். அவர் மீது புகார் கொடுத்தால் யாராவது நடவடிக்கை எடுப்பார்களா ? அப்படிப்பட்ட நேர்வில், பாதிக்கப்பட்ட நபர், நீதிபதி முன்பு பிரிவு 200ன் கீழ் புகார் கொடுக்கலாம். உங்கள் புகாரின் மீது விசாரணை நடத்த போதுமான ஆதாரங்கள் உள்ளன என்று நீதிபதி கருதினால், அவர் விசாரணையை நடத்துவார். வழக்கம் போல, சாட்சி விசாரணை குறுக்கு விசாரணை ஆகியவை நடைபெறும். அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் சாட்சிகளை விசாரிப்பது போல, புகார் கொடுத்தவரின் வழக்கறிஞர் விசாரிப்பார். குற்றவாளியின் தரப்பு வழக்கறிஞர் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வார். இதர நடைமுறைகள் மற்ற வழக்குகளைப் போலத்தான்.
இப்படி தனிப்பட்ட முறையில் தொடரப்படும் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், அவர்கள் அரசு ஊழியர்களாக இருந்தாலும், தங்கள் சொந்த செலவில் வழக்கறிஞர்களை வைத்துக் கொள்ள வேண்டும். காவல்துறை அதிகாரிகளால் பாதிக்கப்பட்டவர்கள், தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பவர்கள், மிரட்டலுக்குப் பணியாதவர்கள், உறுதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வார்கள். இது போன்ற வழக்குகளில் பாதிக்கப்படும் காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்களை அமர்த்தி தங்களை தற்காத்துக் கொள்ள, மாவட்ட எஸ்.பிக்களுக்கு நிதி வழங்கப்படுமாம். ஒரு காவல்துறை அதிகாரி செய்யும் தவறுக்கு, பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால், அவருக்காக வாதாட வரும் வழக்கறிஞர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் கட்டணம் செலுத்துவது என்ற முடிவு உச்சகட்ட அயோக்கியத்தனம். உயர்நீதிமன்றத்தில், அதிகாரிகளின் தனிப்பட்ட செயல்களுக்காக வழக்கு தொடுத்து, அவர்களை பெயரிட்டு எதிர் மனுதாரராக சேர்க்கப்படும் நேர்வுகளில், அரசு வழக்கறிஞர்கள் அவர்களுக்காக வாதாட மாட்டார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தனியாக, சொந்த செலவில் வழக்கறிஞர்களை வைத்துக் கொள்ள வேண்டும். உயர்நீதிமன்றத்தில் கூட இல்லாத சலுகையை காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளானர்.