TAI Youtube Channel

பரோல் Parole யாருக்கு எப்போது வழங்கப்படுகிறது?

பரோல்-Parole-யாருக்கு-எப்போது-வழங்கப்படுகிறது.jpg

வரையறை

சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவரை இடையில் நிபந்தனையின் பேரில் தற்காலிகமாக விடுவித்தல் ‘பரோல்’ எனப்படும். அந்த விடுவிப்பை அதற்குரிய ஆணைய அதிகாரி எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம்.

பரோலில்எப்போதுவிடுவிக்கலாம்

கைதி ஒருவர் முழுமையாகக் குருடாகிவிடுதல் மற்றும் குணப்படுத்த முடியாத குருட்டுத் தன்மையில் இருத்தல்.

நுரையீரல் சம்பந்தமான கடுமையான காசநோயால் பாதிக்கப்பட்டிருத்தல், அந்த நோயின் காரணமாக, கைதி எந்தக் குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறாரோ அந்தக் குற்றத்தை மீண்டும் செய்ய முடியாதிருத்தல்.

கைதியின் உடல்நலம் மிகவும் மோசமாக பாதிக்கப்படுதல், அவர் பரோலில் விடுவிக்கப்படாமல் இருந்தால் உடல்நலமின்மை காரணமாக இறந்துபோக நேரிடும். வெளியில் அனுப்பினால் மீண்டும் உடல்நலம் பெற வாய்ப்புள்ளது.

தொற்று நோயல்லாத வேறு நோயின் காரணமாக கைதி ஒருவர் இறந்துவிடும் அபாயநிலையில் இருத்தல். அவர் சிறையின் உள்ளேயோ சிறைக்கு வெளியிலோ உடல்நலம் பெற வாய்ப்பில்லாதிருத்தல் ஆகிய இந்த நிலைகளில் கைதியை விடுவிக்கலாம்.

கைதி ஒருவரைச் சிறைக்கு வெளியில் அல்லது புகலிடம் ஒன்றில் சிகிச்சைப் பெறுவதற்காகவும் விடுவிக்கலாம்.

இவைகளைத் தவிர, கைதி ஒருவரைப் பிரத்யேகமான சூழ்நிலைகளில் (Extraordinary circumstances) விடுதலை செய்யலாம்.
அதாவது ஈமச் சடங்குசெய்வதற்கும் (Funeral rites) மற்றும் முக்கிய சடங்குகளில் கலந்து கொள்வதற்கும் அல்லது மரணப்படுக்கையில் இருக்கும் உறவினரைப் பார்பதற்கும் விடுவிக்கலாம்.

உச்சநீதிமன்றம் Smt.Poonam lata Vs Wadhawan and other (AIR 1987 SC 1383) என்ற வழக்கில் “பரோல்’ பற்றி விளக்கமளிக்கிறது;

பரோலில் கைதி ஒருவரை விடுதலை செய்வதென்பது நிர்வாகத் துறை சார்ந்ததாகும். அது பற்றிய விவரம் நீதிமன்றத்திற்கு தெரியாததாகவே இருந்தது. அண்மைக் காலங்களாக சில உயர்நீதிமன்றங்கள் மனிதாபிமானத்தைக் கவனத்தில் கொண்டு கைதிகளை பரோலில் விடுவித்து வருகின்றன.

வரலாற்று அடிப்படையில், பரோல் என்பது இராணுவச் சட்டத்திற்கு உரியதாகும். இராணுவத்தில் போர்க்கைதி (War Prisoner) திரும்ப வருவதற்கு உறுதியளித்ததன் பேரில் பரோலில் விடுவிக்கப்பட்டார். பரோல்’ என்பது இங்கிலாந்து மற்றும் அமெரிக்க குற்றவியல் நீதிமுறையில் உள்ள ஒரு சொல்வழக்காகும், குற்றம் மற்றும் குற்றவாளிகளின் மீதுள்ள சமூகத்தின் மனநிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக பரோல் முறை அந்த நாடுகளில் கொண்டுவரப்பட்டது.

பரோலில் விடுதலை செய்வது அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், 18 மாதங்களுக்கு மேல் தண்டனை அடைந்தவர்கர்கள் உரிமத்திற்குட்பட்டு விடுவிக்கப்படுவார்கள். அதாவது தண்டனையை அனுபவிக்கும் மூன்றாவது பருவத்திற்குப் பின்னர் பரோலில் விடுவிக்கப்படுவார்கள். அந்த நாடுகளில் பரோல் என்பது கருணையின் அடிப்படையில் வழங்கப்படுவதாகும். அதனை உரிமையாகக் கொண்டாட முடியாது.

தண்டனைக் கைதி பரோலில் விடுவிக்கப்படும் போது சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு விடுவிக்கப்படலாம். அவர் அந்த நிபந்தனைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ளுதல் வேண்டும். தண்டனைக் கைதி பரோலில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும், அதை ஒரு பகுதி சிறை வைப்பாகவே மேற்கொள்ளுதல் வேண்டும்.

பரோலில் விடுதலை செய்வதென்பது சீர்திருத்தத்திற்கான நடைமுறையாகும். கைதி தன்னை திருத்திக் கொண்டு பயனுள்ள குடிமகனாக ஆவதற்குப் பரோல் மூலம் கைதிக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. பரோல், கைதிக்கு பகுதியளவு சுதந்திரத்தை அளிக்கிறது அல்லது கைதிக்கு வரையரைகளைக் கற்பிக்கிறது. ஆனால், அவர் பரோலில் விடுவிக்கப்படுவதால், கைதி என்ற தகுதியினின்று மாறுபடமாட்டார்.

பரோலில் விடுவிக்கப்பட்ட கைதிகளைப் பரோல் வழங்கும் அதிகாரி கண்காணிப்பதற்கு விதிகள் இயற்றப்பட்டுள்ளன. பரோலில் விடுதலையான கைதி ஒருவர் பரோல் வழங்கும் அதிகாரியிடம் உறுதியளித்திட்டபடி நடந்து கொள்ளாத போது, அந்த அதிகாரி, அந்தக் கைதியை சரணடையும்படி கட்டளையிடலாம்.

பரோல் என்பது நீண்டகால தண்டனையைப் பெற்ற கைதி ஒரு பகுதியளவு தண்டனையை அனுபவித்திருக்கும் போது மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும், உயர்நீதிமன்றங்களோ, உச்சநீதிமன்றமோ காவலில் வைக்கப்பட்டவரை (Detenu) பரோலில் விடுவிக்கக் கூடாது. பிரத்யேகமான சூழ்நிலைகளில் கைதியை உயர்நீதிமன்றம் குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 482-இன் படி விடுதலை செய்யலாம்.

scroll to top

You cannot copy content of this page

error: Content is protected !!