TAI Youtube Channel

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஒரு அரசு ஊழியரை எவ்வளவு காலத்திற்கு பணியிடை நீக்கத்திலேயே அரசு வைத்திருக்கலாம்?

பணியிடை-நீக்கம்-செய்யப்பட்ட-ஒரு-அரசு-ஊழியரை.jpg
DSP செல்வமணி லஞ்ச வழக்கு : செல்வமணி என்பவர் சார்பு ஆய்வாளராக 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணியில் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 1998 ஆம் ஆண்டில் ஆய்வாளராகவும், 2010 ஆம் ஆண்டில் காவல்துறை துணை கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு பெற்றார். அவர் இராயபுரம் உதவி ஆணையராகவும், தாம்பரம் உதவி ஆணையராகவும் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 2011 ஆம் ஆண்டில் மாவட்ட குற்றப் பதிவேட்டு பிரிவிலும், 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் திருச்சி மாவட்டம் லால்குடியில் காவல் துணை கண்காணிப்பாளராகவும் பணியமர்த்தப்பட்டார். அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் லால்குடி, கல்லாகுடி, கொல்லடம், சமயபுரம் மற்றும் சிறுகானூர் காவல் நிலையங்கள் இருந்தது. இந்நிலையில் ராஜமாணிக்கம் என்பவரிடம் ரூ. 25,000/- லஞ்சம் கேட்டதாக ஒரு வழக்கு திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு சிறப்பு ஆய்வாளரால் குற்ற எண். 11/2012 என்கிற எண்ணில் பதிவு செய்யப்பட்டது. அதனால் அவரை பணியிடை நீக்கம் செய்து G. O. 2D. 208 HOME (Pol. 2) Department என்கிற எண்ணில் ஓர் உத்தரவு 27.7.2012 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. DSP மீதான லஞ்ச குற்ற வழக்கில் இறுதியறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த DSP தன்னை பணியிடை நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் W. P. NO – 21014/2013 என்ற எண்ணின் கீழ் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தார். அதனை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், DSP யை பணியிடை நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி ஒரு மனுவை அரசிற்கு அளிக்குமாறும், அதனை அரசு பரிசீலனை செய்து DSPயை அதிக முக்கியத்துவம் இல்லாத தொலை தூரத்திலுள்ள ஒரு பதவியில் நியமிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவினால் குறையுற்ற அரசு ஒரு ரிட் மேல்முறையீட்டை W. A. NO – 1552/2014 என்ற எண்ணின் கீழ் தாக்கல் செய்தது. அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் DSP தன்னை பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு ஒரு மனுவை அரசிடம் அளிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டதோடு, அந்த மனுவை இரண்டு வாரங்களில் பரிசீலனை செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. மேற்படி உத்தரவுபடி DSP ஒரு கோரிக்கை மனுவை தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளரிடம் 17.12.2012 ஆம் தேதி அளித்தார். அந்த மனுவை பெற்றுக் கொண்ட முதன்மை செயலாளர், DSP லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பொறி வைத்து பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வருவதால், பொது நிர்வாகத்துறையில் அவருக்கு மீண்டும் பணி வாய்ப்பு வழங்கப்பட்டால், அது மற்ற பொது ஊழியர்களின் நடத்தையை பாதிக்கும் என குறிப்பிட்டு DSP யின் கோரிக்கை மனுவை நிராகரித்து 30.12.2014 ம் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்தார். அந்த உத்தரவை எதிர்த்து DSP சென்னை உயர்நீதிமன்றத்தில் W. P. NO – 26606/2015 என்ற ரிட் மனுவை தாக்கல் செய்தார். DSP தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்அம்பிகாபதி Vs இயக்குநர், மக்கள் நல்வாழ்வுத் துறை (1991-WLR-273) மற்றும் அஜய் குமார் செளத்ரி Vs யூனியன் ஆப் இந்தியா (2015-2- SCALE – 432)” ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, பணியிடை நீக்கம் உத்தரவு 3 மேல் நீடித்திருக்ககூடாதென்றும், அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் தவறு செய்ததாக கூறப்படும் அரசு ஊழியர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் மீது உரிய உத்தரவை பிறப்பித்து, அந்த பணியிடை நீக்கத்தை நீட்டித்திருக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் இந்த DSP யை எந்தவிதமான காரணங்களையும் குறிப்பிடாமல் பணியிடை நீக்கம் செய்து, நீண்ட காலமாக பணியிடை நீக்கத்திலேயே அரசு வைத்துள்ளது என்றும், எனவே அந்த உத்தரவை ரத்து செய்து DSP யை பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். DSP தரப்பு வாதத்தை கேட்ட உயர்நீதிமன்றம், இந்த ரிட் மனுவை உச்சநீதிமன்றம்அஜய் குமார் செளத்ரி Vs யூனியன் ஆப் இந்தியாஎன்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்க வேண்டும் என்று கூறியது. ஓர் அரசு ஊழியரை பணியிடை நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவானது 3 மாதங்களுக்கு மேல் நீடித்திருக்ககூடாது எனவும், அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் தவறு செய்ததாக கூறப்படும் அரசு ஊழியருக்கு அந்த குற்றச்சாட்டு சார்வு செய்யப்பட்டு, அதன் மீது உரிய உத்தரவை பிறப்பித்து, இடைநீக்கத்தை நீட்டித்திருக்க வேண்டுமென்று மேற்கண்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. தமிழ்நாடு அரசாங்கம் கடித எண் 13519/எண்/2016-1,P & AR (PER. N) Dept என்கிற 23.07.2015 ஆம் தேதியிட்ட கடிதத்தின் மூலம் அரசு முதன்மை செயலாளர்கள், தலைமைச் செயலகத்தில் உள்ள துறைகள் மற்றும் அனைத்து துறையினரையும் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. எனவே ஒரு அரசு ஊழியரை நீண்ட காலமாக எந்த காரணங்களும் இல்லாமல் பணியிடை நீக்கத்தில் வைத்திருப்பது நியாயமற்றது என்று கூறி இந்த DSP யை தொலை தூரத்தில் உள்ள அதிக முக்கியத்துவம் இல்லாத பணியில் வேலைக்கு அமர்த்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. W. P. NO – 26606/2015, DT – 29.9.2016
scroll to top

You cannot copy content of this page

error: Content is protected !!